கோட்டாபயவின் அறிக்கைக்கு பேராயர் மீண்டும் பதிலறிக்கை!

கோட்டாபயவின் அறிக்கைக்கு பேராயர் மீண்டும் பதிலறிக்கை!

Editor 1

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான கோட்டாபயவின் அறிக்கைக்கு கர்தினால் மற்றுமொரு பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மீண்டும் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கர்தினால் தாம் தொடர்பில் முன்வைத்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும், அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த 25ஆம் திகதி அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இதற்கு பதிலளித்துள்ள கர்தினால் மெல்கம் ரஞ்சித், தாம் கூறிய கருத்துக்கள் உண்மையானவை என தெரிவித்துள்ளார்.

அத்துடன், முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகள் மட்டுமன்றி ஏனைய அமைப்புக்களையும் தடை செய்ய வேண்டும் என்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் தமக்கு எவ்வித சிக்கலும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி தம்மிடம் கூறியதாகவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறானதொரு விடயத்தை தம்மிடம் கூறவில்லையென்றால் மனசாட்சிப்படி இவ்வாறான குற்றச்சாட்டை தம்மால் முன்வைக்க முடியாது எனவும் பேராயர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஒடுக்கும் நடைமுறையை தற்போதைய அரசாங்கம் தொடருகின்றமை தெளிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விமர்சனம் தொடர்பில் சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் நேர்மையான விசாரணை தேவை எனவும், அவ்வாறான ஒரு விடயம் முடியும் வரை தாம் காத்திருப்பதாகவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Share This Article