போலி ஆவணங்கள் தயாரித்து சிறுவனை இங்கிலாந்து அனுப்ப முயற்சி! முல்லைத்தீவுப் பெண்கள் இருவர் கைது!

போலி ஆவணங்கள் தயாரித்து சிறுவனை இங்கிலாந்து அனுப்ப முயற்சி! முல்லைத்தீவுப் பெண்கள் இருவர் கைது!

Editor 1

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை தாய் மற்றும் அவரின் மகனின் தகவல்களை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து, 17 வயதுடைய சிறுவனை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற இரண்டு பெண்கள் கட்டுநாயக்க
விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரு சிறுவனுடன் இங்கிலாந்துக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளார்.

அவர்கள் கரும பீடத்துக்கு வந்த போது, அவர்களின் ஆவணங்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் அவர்களை விமான நிலையத்தில் உள்ள குடிவரவுத் திணைக் களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில் நுட்ப சோதனையின்போது அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த அதிகாரிகள் சிறுவனை, தனியே அழைத்துச் சென்று இவ்விடயம்
தொடர்பில் விசாரித்தபோது இது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் இளைஞர் கூறியுள்ளதுடன், அவரின் உண்மையான தாய் அப்போதும் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் காத்திருப்பதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, உடனடியாக செயற்பட்ட அதிகாரிகள், அவரது தாயாரை தேடி கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டபோது, இலங்கையில் தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியினால் தனது குடும்பம் கடும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அதனால் இளைஞனின் நலன் கருதி, இவ்வாறு வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும் கூறியுள்ளார்.

குறித்த பெண்கள் இருவரும் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்கா விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர் .

இந்த விசாரணைகளின்போது , இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனின் தகவல்களை வைத்து வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை தயார் செய்து இலங்கை ஆண் பிள்ளைகளை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று ஆள் கடத்தல் தொழில் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article