சுதந்திரபுரத்தில் மரணச்சடங்கில் கை கலப்பு! ஆறு பேர் காயம்!

சுதந்திரபுரத்தில் மரணச்சடங்கில் கை கலப்பு! ஆறு பேர் காயம்!

editor 2

மரண வீடொன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக 6 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் மத்தி கிராமத்தில் வெள்ளிக்கிழமை (29) மரண வீடொன்றில் இடம்பெற்ற இறுதிக்கிரியைகளின்போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

வாய்த்தகராறு கைகலப்பாக மாறியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். அதனையடுத்து, அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

பின்னர், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

சுதந்திரபுரம் மத்தி பகுதியினை சேர்ந்த 61 வயதான குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 24ஆம் திகதி தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏறியபோது தவறி வீழ்ந்து காயமடைந்து, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 

அவருக்கான இறுதிக்கிரியைகள் வெள்ளிக்கிழமை (29) சுதந்திரபுரம் மத்தி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது.

இறுதிக்கிரியையில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இருந்து உறவினர்கள் வருகை தந்துள்ளனர். 

அதன் பின்னர், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இருந்து வருகை தந்த இளைஞர்களுக்கும் சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த இளைஞர்களுக்கும் மயானத்தில் வைத்து வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றி அடிதடியில் இறங்கியதோடு, மரண வீட்டிலும் கத்திகளை கொண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 

இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இருந்து வருகைதந்த உறவினர்களில் மூவரும் சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த இளைஞர்களில் மூவரும் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

பின்னர், இவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவர் தீவிர சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.

Share This Article