இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியப் பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தும் தமது பயண வழிகாட்டல் தம்முடைய மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியது எனவும், இவ்வழிகாட்டல் நம்பத்தகுந்த நிபுணத்துவ தகவல்களை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகிறது எனவும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் பயண வழிகாட்டல் ‘மிகக் கடுமையானதாக’ இருப்பதாகவும், அதனை தளர்த்துமாறும் இலங்கை சார்பில் பல்வேறு தரப்பினர் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக இவ்வருட ஆரம்பத்தில் சுற்றுலாத்துறையின் முன்னணி சேவை வழங்குநர்கள் இணைந்து இலங்கைக்கான பயண வழிகாட்டலைத் தளர்த்துமாறு கோரி 35 கையெழுத்துக்களுடன் கூடிய திறந்த கடிதமொன்றை பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கைக்கான பயண வழிகாட்டலை மாற்றியமைப்பதற்கான உத்தேசம் குறித்து பிரிட்டன் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரிட்டன் அமைச்சர் தாரிக் அஹமட் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இலங்கை உள்ளடங்கலாக அனைத்து நாடுகளுக்குமான பயண வழிகாட்டல்களைத் தயாரிக்கும்போது பிரித்தானியப் பிரஜைகளின் பாதுகாப்பையே தாம் முன்னிலைப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியப் பிரஜைகள் தமது வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் அறிவார்ந்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் எமது பயண வழிகாட்டல்கள் தயாரிக்கப்படுவதுடன், அதில் ‘அச்சுறுத்தல் மதிப்பீடானது’ தொடர்ந்து மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தாரிக் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று ‘எமது பயண வழிகாட்டலானது பிரிட்டன் பிரஜைகளுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் தொடர்பான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். இம்மதிப்பீடு பிற நாடுகளிலுள்ள எமது தூதரகங்கள் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள், பிற நாட்டு அரச கட்டமைப்புக்களின் தகவல்கள் உள்ளடங்கலாக நம்பத்தகுந்த நிபுணத்துவ தகவல்களின் பிரகாரமே மேற்கொள்ளப்படுகிறது’ எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.