ஆஸி. தேசிய பல்கலைக்கழக பிரதிநிதிகள் யாழ்.பல்கலைக்கு விஜயம்!

ஆஸி. தேசிய பல்கலைக்கழக பிரதிநிதிகள் யாழ்.பல்கலைக்கு விஜயம்!

editor 2

அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டது. 

இலங்கையில் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள கடல்சார் வள மற்றும் கடலோர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுத் திறன் மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கும், அவுஸ்திரேலிய அரசின் உதவிகள் வழங்கப்படக்கூடிய இடங்களை அடையாளம் காணும் வகையிலும், கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரத்துக்கான முதல் செயலாளர் கலாநிதி போல் செக்கோலா தலைமையிலான குழுவினரே கடந்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்துள்ளனர். 

இதன்போது, இக்குழுவினர் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையிலான குழுவை சந்தித்து கலந்துரையாடினர். 

இந்த சந்திப்பின்போது அவுஸ்திரேலிய அதிகாரிகள் குழுவில், தென்னாசிய மற்றும் இந்து சமுத்திரக் கடல் பிராந்தியப் பாதுகாப்புசார் விற்பன்னரும் அவுஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழக தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளருமான கலாநிதி டேவிற் பிரேஸ்டர், ரோயல் அவுஸ்திரேலிய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரியும், புதுதில்லியில் கடமையாற்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகருமான கப்டன் சைமன் பேட்மன், கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமெண்டா ஜோண்சன் மற்றும் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அத்தியட்சகர் வனேசா ரஃப் ஆகியோர் அடங்கினர். 

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சார்பில் கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் மற்றும் பொருளியல் துறைத் தலைவர் கலாநிதி (திருமதி) கே. கருணாநிதி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். 

தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகள் மற்றும் அவுஸ்திரேலிய அரசின் நலனோம்புத் திட்டங்கள் தொடர்பில் அவ்வேளை கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், சட்ட விரோத புலம்பெயர்வு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சமூக மட்டச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

Share This Article