வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று, வழிபாட்டு நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், கைது நடவடிக்கைகள் இடம்பெற்றமை தொடர்பில், தாம் கவலையடைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம
தாச தெரிவித்துள்ளார்.
இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று, வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டமை மற்றும் அது தொடர்பில், 8 பேர் கைது செய்யப்பட்டமையை கண்டித்து, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் நேற்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதனால் சபையில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவரும் ஆதரவு வழங்கியிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சிவராத்திரி தினத்தில் வழிபாட்டு நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், கைது நடவடிக்கைகள் இடம்பெற்றமை தொடர்பில், தாம் கவலையடைவதாக தெரிவித்தார்.
கோவிலுக்குள் வழிபாடுகளில் ஈடுபட்டதாக எவரையும் கைது செய்யமுடியாது.
எனவே இந்த விடயம் தொடர்பில், விரிவான விசாரணை அவசியமாகும். சகல மதங்களுக்கும், மதச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அந்த சுதந்திரம் வடக்குக்கு ஒன்றாக வும், தெற்குக்கு ஒன்றாகவும் இருக்கக்கூடாது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.