வடக்கு தமிழ் தலைவர்களுடன் பேச்சு நடத்தப்போகிறேன் என்கிறார் அநுர!

வடக்கு தமிழ் தலைவர்களுடன் பேச்சு நடத்தப்போகிறேன் என்கிறார் அநுர!

editor 2

வடக்கு தமிழ்த் தலைவர்களுடன் ஏப்ரலில் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், தமது ஆட்சியில் முற்போக்கு தமிழ் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்றும் மொழி உரிமை, நில உரிமை, கலாசார உரிமை உள்ளிட்டவை உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு சனிக்கிழமை (16) கூட்டுறவுசங்க மண்டபத்தில் நடைபெற்றபோது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சியில் உள்ளவர்கள் தமிழ் மக்களாக முகங்கொடுக்கும் பிரச்சினைகளும், பொதுமக்களாக முகங்கொடுக்கும் பிரச்சினைகளும் உங்களின் முன்னால் உள்ளன.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அவற்றிலிருந்து வெளியே வரவேண்டும். இந்தப் பிரச்சினைகள் இயற்கை அனர்த்தங்களால் ஏற்பட்டவை அல்ல. நாட்டின் அரசியல் கலாசாரம் மற்றும் நிருவாகத்தினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளாகவே உள்ளன.

ஆகவே, தமிழ் மக்களாக நீங்களும், பொதுமக்களாக அனைவரும் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு அரசியல் ரீதியான தீர்மானத்தினை எடுக்கவேண்டியுள்ளது.

கீழ்மட்ட மக்கள், துன்புறும் மக்கள், பொதுமக்கள் என்று அனைவரும், வடக்கு,கிழக்கு, தெற்கு என்ற பேதமின்றி புதிய அரசாங்கத்தினை நாம் உருவாக்க வேண்டும். 

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல்களின்போது வெவ்வேறு தீர்மானங்களை வடமாகாண தமிழ் மக்கள் எடுத்துள்ளார்கள். 

தேர்தலை புறக்கணித்துள்ளீர்கள், தமிழ் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளீர்கள், தமிழ் கட்சிகள் ஆதிரிக்கும் தென்னிலங்கை தேசிய கட்சிகளுக்கு ஆதரவளித்துள்ளீர்கள்.

அதுதுமட்டுமன்றி, வடக்கு மக்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அதிகளவில் கவனம் செலுத்துவது கிடையாது. அது கொழும்புக்குத் தலைமையை தேடுகின்ற, சிங்களமக்களுக்கு தலைமை வழங்குகின்ற தேர்தல் என்ற நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கின்றீர்கள். 

எதிர்காலத்திலும் இந்த நிலைமையைத் தொடரமுடியாது. வடக்கும், கிழக்கும், தெற்கும் இணைந்து ஆட்சியை தீர்மானிக்கும் காலம் வந்துவிட்டது. அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம். 

வழக்கமாக சமஷ்டி தருகின்றோம் எமக்கு வாக்களியுங்கள், 13பிளஸ் தருகின்றோம் எமக்கு வாக்களியுங்கள் என்று தான் கூறுவார்கள். நாங்கள் அவ்வாறு கூறப்போவதில்லை. ஏனென்றால் நாங்கள் உங்களுடன் கொடுக்கல் வாங்கள் செய்வதற்கு வரவில்லை. அரசியல் என்பது வியாபாரம் அல்ல. 

நாம் உங்களுக்கு ஒரு உறுதி மொழியைத் தருகின்றோம். நாம் ஆட்சியைப் பொறுப்பை ஏற்றதும் அனைவருக்கும் மூன்று வேளை உணவை உறுதிப்படுத்துவோம். மொழி, நிலம், கலாசாரம் ஆகிய உரிமைகளை உறுதிப்படுத்துவோம். 

அரசியலமைப்பு மாற்றம் தேவைப்பட்டால், அதுபற்றி ஆராய்வோம். அரசியல் உரிமைகள் பற்றி பேச்சுக்களை நடத்துவோம். 

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நாம் யாழப்பாணத்துக்கு செல்லவு;ளளோம். அங்கு வடக்கின் தமிழ்த் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளோம் தற்போது எம்முடன் முற்போக்கான தமிழ் தலைவர்கள் உரையாடல்களைச் செய்துவருகின்றார்கள். எமது ஆட்சி அமைகின்றபோது அவ்விதமான முற்போக்கு பிரதிநிதிகள் பங்காளர்களாக இருப்பார்கள்.

நாங்கள் ஆட்சியைப் பெற்றுக்கொண்டு தேசிய ஒற்றுமை குறித்து பேசுவதற்கு முனையவில்லை. நாம் தேசிய ஒற்றுமையுடனான ஆட்சியை அமைப்பதையே நோக்க கொண்டிருக்கின்றோம்.

சுதந்திரத்தின் பின்னரான ஏற்படுத்தப்பட்ட பிரிவினைகளை தொடர்ந்தும் பின்பற்றிக் கொண்டும், பரம்பரைபரம்பரையாக ஆட்சி அதிகாரத்தினை தக்கவைக்கும் கலாசாரத்தினையும் மாற்றுதற்கு தெற்கு மக்கள் தயாராகி விட்டார்கள். அவர்களுடன் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள். தமிழர்களின் பங்களிப்புடனான ஆட்சியையே நாம் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

Share This Article