கைதிகளில் 60 வீதமானோர் போதைக்கு அடிமையானர்வகள்!

கைதிகளில் 60 வீதமானோர் போதைக்கு அடிமையானர்வகள்!

editor 2

இலங்கையில் தற்போது சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள்” என நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு தண்டனை வழங்குவது மாத்திரம் போதாது. அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கும், உரிய தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்குமான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம்.

சமூக சீர்திருத்த முறைமையையும் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதன் மூலமும் சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடிகளை ஓரளவு கட்டுப்படுத்த முடியுமென நாம் எதிர்பார்க்கின்றோம். சுகாதார அமைச்சுடன் நீதி அமைச்சும் இணைந்து முன்னெடுத்த கலந்துரையாடலில்
கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக, மட்டக்களப்பு மாந்தீவினை வழங்குவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண இணக்கம் தெரிவித்துள்ளார்.

இது சுமார் 90 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பாகும். அதிலுள்ள 40 ஏக்கர் பயிச்செய்கை நிலமாகவும் காணப்படுகிறது.
தற்போது சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள்.

எனினும் அனைவருக்கும் புனர்வாழ்வளிப்பதற்கு தற்போதுள்ள நிலையங்களில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எனவே புனர்வாழ்வு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கந்தளாய் பழைய சீனி தொழிற்சாலைக்குரித்தான 22 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள 22 கட்டடங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

அதே போன்று வவுனியாவில் ஒன்றிணைந்த புனர்வாழ்வளிப்பு நிலையத்தின் ஊடாக ஒரே சந்தர்ப்பத்தில் 100 பெண்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கும் நாம் திட்டமிட்டுள்ளோம். அத்துடன் புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகளிலிருந்து முப்படையினரை முற்றாக அகற்றி, அவர்களுக்கு பதிலாக இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Share This Article