கோட்டபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள நூலில் ஒருசில உண்மைகள் காணப்படுவதைப் போன்று பல பொய்களும் காணப்படுகின்றன. பஷிலுடன் எனக்கு அரசியல் முரண்பாடு இருந்ததே தவிர தனிப்பட்ட முரண்பாடு ஏதும் இருக்கவில்லை. பொருளாதார நெருக்கடிகளை தீவிரப்படுத்துவதற்காக அரசாங்கத்துக்குள் முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சிகளை நாட்டுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் னஎ பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள நூலில் நேரடியாகவும்,மறைமுகமாகவும் எம்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் வெளியானதும் அதை வாங்கி படித்தேன்.அதில் ஒருசில உண்மைகளை போல் பல பொய்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.புத்தகத்தில் 66 ஆவது பக்கத்தில் ‘உதய மற்றும் விமல் ஆகியோர் எம்மை விட்டு விலகிச் சென்றார்கள்’என குறிப்பிடப்பட்டுள்ளது.பாரதூரத்தன்மையை அவர் மறந்து விட்டார்.
உண்மையில் நாங்கள் விலகிச் செல்லவில்லை.விலக்கப்பட்டோம்.அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாகும் வகையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை அவர் மறந்து விட்டார்.அரச நிதியை மோசடி செய்த குற்றத்துக்காக எங்களை அரசாங்கத்திலிருந்து விலக்கவில்லை.பொருளாதார பாதிப்பால் சமூக கட்டமைப்பில் ஏற்படப் போகும் விளைவுகள் குறித்து அரசாங்கத்திடம் எடுத்துரைத்தோம்.எமது கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தாததால் மக்களிடம் உண்மையை எடுத்துரைத்தோம்.இதன் பின்னரே நாங்கள் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டோம்.
65 ஆவது பக்கத்தில் ‘பசிலுக்கும் உதயகம்மன்பிலவுக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடு காணப்பட்டது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.பஷிலுக்கும் எனக்கும் தனிபட்ட முரண்பாடு தோற்றம் பெற நான் அவரின் மகளை திருமணம் முடித்துக் கொள்ள கேட்கவுமில்லை, மல்வானை சொகுசு வீட்டுக்கு உரிமை கோரவுமில்லை.எனக்கு அவரிடம் அரசியல் முரண்பாடு இருந்ததே தவிர தனிப்பட்ட முரண்பாடுகள் ஏதும் இருக்கவில்லை.ஆகவே பஷிலுக்கும் எனக்கும் இடையில் காணப்பட்ட தனிப்பட்ட பகையை கோட்டபய ராஜபக்ஷ வெளிப்படுத்த வேண்டும்.
பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் மேற்குலக நாடுகள் செயற்பட்ட விதம்,இராணுவ தளபதி பொறுப்பற்ற வகையில் செயற்பட்ட விதம் குறித்து கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.பொருளாதார நெருக்கடிகளை தீவிரப்படுத்தும் வகையில் அரசாங்கத்துக்குள் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக நாங்கள் குறிப்பிட்டதை கோட்டபய ராஜபக்ஷ கவனத்திற் கொள்ளவில்லை.ஆகவே அந்த உண்மைகளையும் அவர் நாட்டுக்கு குறிப்பிட வேண்டும் என்றார்.