முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைகளுக்காக எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போது, முல்லைத்தீவு – கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளின் மூன்றாம் கட்ட பணிகளை திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்கு இன்னும் நிதி கிடைக்கப்பெறவில்லை என குறித்த வழக்கின் அகழ்வு பணியில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக அரசாங்க அதிபர் நீதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது கடந்த வருடம் 6ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ச்சியாக 11 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன.
மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த வருடம் நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக 9 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அத்தோடு அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.