யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஆறு பேரும் நிபந்தனையின் அடிப்படையில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை (06) விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த மாதம் 23 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் இரண்டு படகுகளில் மூன்று பேர் வீதம் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. நீரியல் வள திணைக்களத்தினரால் ஆறு மீனவர்களுக்கு எதிராகவும் மும்மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
மீனவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து மூன்று குற்றச்சாட்டுகளுக்கு தலா ஆறு மாத கால சாதாரண சிறைத் தண்டனை வீதம் 18 மாத சாதாரண சிறைத் தண்டனை விதித்து அதனை ஐந்து வருடங்களுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஜே.கஜநிதிபாலன் ஒத்தி வைத்தார். படகின் உரிமையாளர்களும் படகில் இருந்ததன் காரணமாக இரண்டு படகுகளும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.