சிவில் குற்றங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் வீட்டுக்காவல்!

சிவில் குற்றங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் வீட்டுக்காவல்!

editor 2

சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சிவில் குற்றங்களில் ஈடுபட்ட அனைவரையும் வீட்டுக் காவலில் வைக்கும் வேலைத்திட்டம் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கான சட்டங்களை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வழங்கிய பின்னர், சட்ட வரைவுப் பிரிவினால் அதற்கான சட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், பணிகள் நிறைவடைந்த பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டமாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு அலுவலகம் 05 மில்லியன் ரூபா பெறுமதியான பேக்கரி உபகரணங்களை பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலைக்கு வழங்கியதன் பின்னர் கைதிகளுக்கான பேக்கரி பயிற்சிப் பாடசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

சிறைச்சாலைகளில் சுமார் 13,000 கைதிகள் தங்குவதற்கு இடவசதி உள்ளது. ஆனால் நீதி நடவடிக்கையின் மூலம் நாளாந்தம் கைது செய்யப்படும் கைதிகளின் எண்ணிக்கை 33,000 ஆக
அதிகரித்துள்ளது.

தற்போது சிறையில் உள்ள கைதிகளில் 65 வீதம் பேர் மட்டுமே போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்.

அவர்களை மீண்டும் சமூகத்தில் விடுவிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து,
அவர்களுக்கு சில தொழில் பயிற்சிகளை வழங்குவதே அரசின் நோக்கம்.

சிவில் குற்றங்களில் ஈடுபட்ட அனைவரையும் சிறையில் கழிப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் தற்போது சிறைச்சாலையில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்.

போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது மட்டுமன்றி அவர்களின் உடல்நலப் பிரச்னைகளுக்கு தீர்வுகளை வழங்கி அவர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு சிறைச்சாலைத் திணைக்களத்திற்கு உள்ளது என்றார்.

Share This Article