தமிழரசுக்கட்சியின் தலைமைப்பீடத்தில் தொடரும் இழுபறி நிலை!

தமிழரசுக்கட்சியின் தலைமைப்பீடத்தில் தொடரும் இழுபறி நிலை!

editor 2

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவில் தொடரும் இழுபறி நிலையால் அடுத்த கட்டத் தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 11ஆம் திகதி வவுனியாவில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் தலைவர் மாவை.சோ. சேனாதிராஜா ஆகியோர் பங்கேற்கவுள்ளதோடு, அதற்கான அழைப்புக்களும் விடுக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்த மத்திய குழு கூட்டத்திற்கான சட்ட வலு குறித்து தொடர்ந்தும் சர்சைகள் காணப்படுகின்றன. 

கடந்த 27ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் புதிய நிருவாகத்தெரிவு நடைபெற்ற நிலையில் அதற்கு பொதுச்சபை அங்கீகாரம் கோரப்பட்டபோது, 112வாக்குகள் ஆதரவாகவும், 104வாக்குகள் எதிராகவும் கிடைத்திருந்தன. 

எனினும், பொதுச்சபை உறுப்பினர்கள் முடிவினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தர்க்கப்பட்டதன் பின்னர் மாவை.சோ.சேனாதிராஜா 17ஆவது தேசிய மாநாட்டை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளார்.

இந்நிலையில், கட்சியின் யாப்பில், பொதுச்சபையின் வாக்கெடுப்பு முடிவுகளுக்கு அமைவாக, தெரிவுசெய்யப்பட்ட நிருவாகக் கட்டமைப்பு தேசிய மாநாட்டின் இறுதியில் அங்கீகரிக்கப்பட்டாலேயே அதனை உள்ளடக்கிய மத்திய குழு நியமிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், மேற்படி நிருவாகத்தெரிவு இடம்பெற்றமையால் ஏலவே இருந்த மத்தியகுழுவும் செயலிழந்து விட்டது. இதனால் கடந்த நிருவாகத்தை உள்ளடக்கிய மத்தியகுழுவினரை மீண்டும் உத்தியோக பூர்வமாக கூட்டுவதும் சட்டவிரோதமானதாகும்.

இதனால் தற்போது தேசிய மாநாட்டை தவிர்த்து மீண்டும் மத்திய குழு கூட்டத்தினை நடத்துவதிலும், அதில் தீர்மானங்களை மேற்கொள்வதிலும் சட்டரீதியான ஏற்புடமை தொடர்பில் சர்ச்சைகள் காணப்படுகின்றன.

எவ்வாறாயினும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களிடையே பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பில் இணக்கப்பாடொன்று ஏற்படுத்திக்கொள்வதற்காகவே மத்தியகுழு கூட்டம்  கூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article