ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக பொலிஸார் 8 பேருக்கு எதிராக தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சட்டத்தை மீறாத வகையில், ஜனநாயக ரீதியில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது என்று நீதிமன்றம் இதன்போது அறிவித்தது.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 7ஆம் திகதி வரை வடக்கு மாகாணத்திலேயே தங்கியிருப்பார்.
இந்த நிலையில், அவரின் வடக்கு மாகாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன. இந்தப் போராட்டங்களை தடுக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸார் தடை உத்தரவு கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த விண்ணப்பத்தையே நேற்று நீதிமன்றம் நிராகரித்தது. இதேவேளை, நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்திருந்த உத்தரவுக்கு அமைய, வழக்கின் 8 ஆவது பிரதிவாதியான வேலன் சுவாமிகள் நீதிமன்றத்தில் நேற்று முன்பட்டு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தார்.