யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரம் பெற்றுள்ள நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்தார்.
டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் மூளைச் சாவடைந்திருந்தார்.
தொடர்ந்து இளைஞனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை காலை உயிரிழந்தார்.
இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாத்திரம் 71 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
ஏற்கனவே, டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு காரணமாக இரண்டு விடுதிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. குழந்தை நோயாளர் விடுதியும் நிரம்பி உள்ளது என வைத்தியசாலை பணிப்பளார் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை 11 மாதக் குழந்தை ஒன்று டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தது. கடந்த சனிக்கிழமை டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமை ஏற்பட்டமையால் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.