போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாதாள உலகத்தினரின் செயற்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிர்வரும் ஜுன் மாதத்துக்குள் முழுமையாக முற்றுப்புள்ளி வைப்பதை இலக்காக கொண்டுள்ளதாக இலங்கயின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தச் சவாலான பயணத்தில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்படுகின்ற யுக்திய போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் மற்றும் பாதாள உலக குழுவினருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை ஆக்கிரமித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம், பாவனை மற்றும் பாதாள உலகக்குழுவினர் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்புத் துறையினர் 24மணிநேரமும் வழிப்புடன் தீவிரமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தச் செயற்பாட்டிற்கு பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். ஆவ்வாறான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படுவதன் மூலமாக போதைப்பொருளற்ற சமூகத்தைக் கொண்ட நாடொன்றை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
இந்தச் செயற்றிட்டத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையான ஆதரவினை அளித்துள்ளார். அத்துடன், பாதுகாப்பு படையினரும் பாரியளவில் ஒத்துழைப்புக்களை வழங்குகின்றார்கள்.
விசேடமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கைகளை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் போதைப்பொருள் கடத்தல்கள், விநியோகம், பாவனை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் மீதும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடும் பாதாள உலகக்குழுவினர் மீதும் எந்தவிதமான தயவுமின்றி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதில் மாற்றமில்லை என்றார்.