2005ஆம் ஆண்டிலேயே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நம்ப வேண்டாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். அப்போது இது குறித்து பலரும் குழம்பினர். ஆனால் அன்று தீர்க்கதரிசனமாக புலிகள் தெரிவித்ததை இன்று ரணில் விக்கிரமசிங்க அவருடைய செயல்பாடுகளால் நிரூபித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடகமையத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அதில், அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
‘நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர்த்து ஏனைய தமிழ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை
அழைத்து நல்லிணக்கம் தொடர்பாக பேசினார்.
பல மாதங்களுக்கு முன்னரே இது குறித்து பேசப்பட்டது. கடந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்னைக்கு தீர்வு எட்டப்படும் என்ற அடிப்படையிலேயே முதல் சுற்று பேச்சு ஆரம்பமானது.
ஆனால், தீர்வு வழங்கப்படவில்லை. இந்த சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தலின் பின்னர்
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணிலால் இந்த பேச்சு ஆரம்பிக்கபட்ட போதே தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதுவொரு நாடகம் என தெளிவாக மக்களுக்கு
எடுத்துக் கூறியிருந்தது. இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேச நாடுகளிடம் கடன் கோரியுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிரான போர் காரணமாகவே சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கைக்கு பெரும் கடன் ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, இனப்பிரச்னைக்கு தீர்ப்பதற்கு திட்டம் வைத்திருப்பதாக சர்வதேச நாடுகளுக்கு எடுத்து காட்டுவதற்கு ஜனாதிபதி ரணில் நாடகம் நடத்தி வருகின்றார்.
ரணில் ஒருபோதும் இந்த பிரச்னையை நேர்மையாக தீர்க்கமாட்டார்.
சிங்கள மக்களுக்கு உண்மையை கூறினால் இந்த பேச்சில் நம்பிக்கை வைக்கலாம். அதை செய்யாமல் வாருங்கள் பெப்ரவரி நான்காம் திகதி தீர்வை கொடுப்போம் என செல்வது
எல்லாம் அப்பட்டமான பொய் கதைகள் ஆகும் – நாங்கள் ஏமாறுவதற்கு தயாரில்லை.
2005ஆம் ஆண்டிலேயே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நம்ப வேண்டாம் என தமிழீழவிடுதலைப் புலிகள் தெரிவித்தனர். அப்போது இது குறித்து பலரும் குழம்
பினர். அன்று தெரிவித்த தீர்கதரிசனத்தை ஜனாதிபதி ரணில் தன்னுடைய செயல்பாடுகளால் நிரூபித்துள்ளார்.’ என்றார்.