யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை அளவீடுகள் செய்வதற்கு நில அளவை திணைக்களம் வருகை தந்தது.
குறித்த காணி அளவீட்டுக்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.
அத்துடன் காணியினை வழங்க முடியாது என கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கினர். இந்நிலையில் நில அளவை திணைக்களம் அங்கிருந்து திரும்பிச் சென்றது.
தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (J/233) கிராம சேவகர் பிரிவுகளில் 12.0399 ஹெக்டயர் (29 ஏக்கர்) நிலம் அளவீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளிலேயே இந்த நில அளவீடு இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த அளவீட்டு பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நில அளவை திணைக்களம் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.