யாழ்ப்பாணத்திற்கு 365 கிலோமீற்றர் தொலைவில் மிக்ஜம் சூறாவளி!

editor 2

மிக்ஜம் சூறாவளி வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக சுமார் 365 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது  என சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

வானிலை குறித்து மேலும் கூறுகையில்,

மிக்ஜம் சூறாவளியானது மேலும் தீவிரமைவதுடன் வடமேற்குத் திசையை நோக்கி இலங்கையிலிருந்து அப்பால் நகர்ந்து சென்று இந்தியாவின் தமிழ் நாட்டின் வடகரையை சென்றடையும். 

இதன்பிற்பாடு வடதிசையை நோக்கி திரும்பி நாளையளவில் தென் ஆந்திராப் பிரதேசத்தை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக சூறாவளி நிலைகொண்டுள்ளதனால் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். 

ஏனைய கடல் பிராந்தியங்களுக்கு செல்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

Share This Article