மட்டக்களப்பில் தனியார் பேருந்து தீக்கிரை!

editor 2

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தொன்று இனந்தெரியாதவர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதான வீதியில் குறித்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு – பொத்துவில் பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்து நேற்று புதன்கிழமை மாலை 7 மணி அளவில் நிறுத்தி வைக்கப்பட்டு உரிமையாளர் தனது சொந்த இடமான கொக்கட்டிச்சோலைக்குச் சென்று விட்டார்.

வியாழக்கிழமை (9) அதிகாலை 3:30 மணியளவில் குறித்த பேருந்து தீப்பற்றி எரிவதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து காத்தான்குடி பொலிசார் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டபோது பேருந்து முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு படையினர் குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் பேருந்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பேருந்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியானது என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share This Article