கிழக்கு மாகாணத்தில் தற்பொழுது பரவலாக அதிக மழை வீழ்ச்சி கிடைத்து வருகின்றது. இதனால், மாகாணத்திலுள்ள நீர் நிலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், கிணறுகள், குட்டைகள் என்பனவற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது.
எனவே, பொதுமக்கள் நீரேந்துப் பிரதேசங்களில் மிக அவதானம், முன்னெச்சரிக்கையுடன் தொழிற்பட்டு, வேண்டத்தகாத உயிரிழப்புக்கள், அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்புப் பெற வேண்டும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
கடல், ஆறுகள், குளங்கள், நீர் நிலைகள் என்பனவற்றில் இறங்கி உயிராபத்தை எதிர்கொண்டவர்களின் தொகை கடந்த காலங்களில் கிழக்கில் அதிகரித்துக் காணப்பட்டது.
குறிப்பாக, பாடசாலை மாணவர்கள், சிறுவர்களின் நடமாட்டம், பாதுகாப்புத் தொடர்பில் பெற்றோர் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகின்றது.
அதிகம் ஆபத்து, ஆழம் நிறைந்த இடங்களில் நீராடுதல், முன் பரிட்சயமற்ற நீர்நிலைகளில் இறங்குதல் என்பனவற்றை முற்றாகத் தவிர்த்துக் கொள்வதுடன், கடலில் நீராடுவதிலும் அவதானம் தேவை என வலியுறுத்தப்படுகின்றது. மனித சஞ்சாரம் இல்லாத அல்லது மக்கள் நடமாட்டம் குறைந்த பிரதேசங்களில் நீராடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறும் வேண்டப்படுகின்றனர்.
கிழக்கு மக்கள் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு வெளி மாகாணங்களிலிருந்து தினசரி வருகை தருபவர்கள், மேற்படி நீரேந்துப் பிரதேசங்களில் மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டுமென பெரியோர்களினால் அறிவுறுத்தப்படுகின்றனர்.
வார இறுதி, விடுமுறை தின பயணங்கள், குடும்ப உறவுகள் நண்பர்களுடனான ஒன்றுகூடல்கள் மற்றும் பரிச்சயமற்ற பிரதேச நடமாட்டங்கள் தொடர்பிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
மக்கள் குடியிருக்கும் வீட்டுச் சூழல் மற்றும் மக்கள் நடமாட்டமுள்ள பிரதேசங்களில் காணப்படும் தேவையற்ற குழிகள், அவசியமற்ற கிடங்குகள், நீர்க் குட்டைகளை முன்கூட்டியே மூடி பாதுகாப்பதும் சிறந்த பாதுகாப்பு வழிமுறையாகும்.
கிழக்கு மாகாணத்திலுள்ள குறித்த சில நீரேந்துப் பிரதேசங்கள், அதிகம் ஆபத்து நிறைந்தவையாக காணப்படுவதனால், அவற்றில் இறங்குதல், நீராடுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் உள்ளுராட்சி சபை அல்லது நிர்ப்பாசனத் திணைக்களம் என்பனவற்றினால் இது தொடர்பான எழுத்துமூல எச்சரிக்கை அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கவனத்திற் கொண்டு தொழிற்பட வேண்டும்.