ஆசிரியர்கள் போராட்டத்தின் மீது தாக்குதல்; ஐக்கிய கல்விச் சேவை சங்கம் கண்டனம்!

editor 2

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் ஆசிரியர் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். அத்துடன் அதிபர் ஆசிரியர்களையும் நாட்டை விட்டு அனுப்புவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது என ஐக்கிய கல்வி சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர். ஆசிரியர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்டிருந்த கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்து மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து ஐக்கிய கல்வி சேவை சங்கத்தின் தலைவி பாராளுமன்ற உறுப்பினர் ராேஹினி குமாரி கவிரத்ன விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

சம்பள நிலுவையை பெற்றுக்கொள்ளல், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான எஞ்சிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க அமைப்பினால் பத்தரமுல்லையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.

பல வருடங்களாகியும் ஆசிரியர்கள் , அதிபர்களின் இந்த பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றை வழங்குவதற்கு அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி இது தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தபோது, அடுத்து வரும் வரவு செலவு திட்டத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என தெரிவித்து கடந்த பல வருடங்களாக இந்த பிரச்சினையை மறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆசிரியர்கள், அதிபர்களின் பிரச்சினையை மறைப்பதற்கு எடுத்த முயற்சியே ஆசிரியர் சேவையின் விரக்தி அதிகரிக்க காரணமாகும்.

கடந்த அரசாங்கம் குழு ஊடாக ஆசிரியர் சேவையில் இருப்பவர்களுக்கு மாத்திரம் அல்லாது ஓய்வுபெற்றவர்களுக்குமான சம்பள அதிகரிப்பை 2020 01,01ஆம் திகதியில் இருந்து செயற்படுத்துவதற்கு பரிந்துரை செய்திருந்தது. புபோதனீ சம்பள முரண்பாட்டு குழு அறிக்கையின் பிரகாரம் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தின் மூன்றில் இரண்டை மாத்திரம் வழங்குமாறு கோருவது என்பது அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பரிந்துரையை செயற்படுத்துவதற்கான கோரிக்கையே அன்றி புதிய கோரிக்கை அல்ல.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குள் மறைந்துகொண்டு அரசாங்கம் மக்களை அடக்கும் சட்ட திட்டங்களை அனுமதித்துக்கொண்டு இந்த கோரிக்கைகளை அடக்குவதற்கே முயற்சிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்லும் வாழ்க்கைச்செலவு, மின் கட்டண அதிகரிப்பு, எரிபொருட்களின் விலை அதிகரிப்பின் மூலம் பண்டம் மற்றும் சேவை கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனவே வாழ்வதற்கு போதுமான சம்பளமொன்றை கோரிவரும் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஆசிரியர்களுக்கு அரசாங்கத்தின் கவனிப்பு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் என்றால் அது நாட்டின் எதிர்காலத்தை இருளில் போடுவதாகும்.

நாட்டின் புத்திஜீவிகள் நாட்டை விடடு செல்வது பாரிய பிரச்சினையாக இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் கல்வித் துறையை வீழ்ச்சியடையச்செய்து ஆசிரியர்களையும் நாட்டை விட்டு செல்லும் நிலைக்கு தள்ளுவதற்கா முயற்சி்க்கிறது என நாங்கள் அரசாங்கத்திடம் கேட்கிறோம்.

எனவே ஆசிரியர்களை கடவுள்களாக மதிக்கும் இந்த சமூகத்தில் ஆசிரிய தாய், தந்தையர்களுக்கு அவர்களிடம் கல்வி கற்று, அவர்களின் பிள்ளைகளுக்கும் நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் பிரிவினருக்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள மிலேச்சத்தனமான இந்த தாக்குதலுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Share This Article