யாழ்.போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டிலிருந்த தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றை இந்தியத் தூதரகம் பணம் கொடுத்து கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்.போதான வீதியின் விக்ரோரியா வீதியில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
காணியின் உரிமையாளர் அண்மையில் உயிரிழந்த நிலையில் அவரின் உறவினர்கள் வைத்தியசாலையிடமிருந்து காணியை மீளப் பெறுவதற்கான முயற்சியினை மேற்கொண்ட நிலையில் எதிர்வரும் மாதம் குறித்த காணியினை கையளிக்க வைத்தியசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இருந்தபோதிலும்,
காணியை வைத்தியசாலைத் தேவைக்காக அரசாங்கத்தினால் கொள்வனவு செய்வதற்காக 60 கோடி ரூபா ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.
இதனிடையே,
யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் ஒருவர் 120 கோடி ரூபாய்க்கு அதனை கொள்வனவு செய்ய முற்பட்டிருக்கின்றார்.
இதனிடையே,
இந்தியத் தூதரகம் 120 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தினைக் கொடுத்து குறித்த காணியினை கொள்வனவு செய்யத் தீர்மானித்திருப்பதாகவும் வைத்தியசாலையில் தீர்மானம் மிக்க உயர் அதிகாரி ஒருவர் அந்நடவடிக்கையில் கூடுதல் அக்கறை கொண்டிருப்பதாகவும் நம்பகரமாக தெரியவந்துள்ளது.
குறித்த காணி பெரிய காணி என்பதால் எதிர்காலத்தில் வைத்தியசாலைக்கு ஏற்படும் மேலதிக இடத் தேவையை அது பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் அதனை இவ்வாறான விற்பனை நடவடிக்கைக்கு உட்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.