கடந்த ஆண்டில் இலங்கையில் 5 இலட்சம் பேர் வேலையை இழந்தனர்!

editor 2

இலங்கையில் ஏறக்குறைய 2000 தொழிற்சாலைகள் ற்றும் பணியிடங்கள் மூடப்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு (2022) 5 இலட்சத்து 33 ஆயிரத்து 858 பேர் வேலையை இழந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

அதன்படி, இவ்வாறு வேலையை இழந்தவர்களுள் தொழில்துறையைச் சேர்ந்த 3 இலட்சத்து 96 ஆயிரத்து 159 பேரும் சேவைத் துறையில் 1 இலட்சத்து 37ஆயிரத்து 699 பேரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடத்தில் தனி நபர்களின் வேலை நேரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக பேராசிரியர் மேலும் கூறினார்.

இளைஞர்களிடையே வேலையின்மை அதிகரிப்பு கடந்த வருடத்தின் முதல் காலாண்டில் 66.1 வீதமானவர்கள் 40 மணித்தியாலங்கள் அல்லது அதற்கு மேல் வேலை செய்த போதிலும் அதே வருடத்தின் நான்காம் காலாண்டில் 40 மணித்தியாலங்கள் மற்றும் அதற்கு மேல் வேலை செய்தவர்களின் எண்ணிக்கை 61.7 வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அதே ஆண்டில், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 51.2 வீதத்திலிருந்து 48.9 வீதமாகக் குறைந்துள்ளதுடன் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வேலையின்மை 14.2 வீதத்திலிருந்து 17.2 ஆக அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும், தொழிற்சாலைகள் மூடப்பட்டமைக்கான கரணங்களாக மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றை நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Share This Article