கொவிட் சடலங்களை எரித்த விவகாரம்; தனிநபர் பிரேரணை!

கொவிட் சடலங்களை எரித்த விவகாரம்; தனிநபர் பிரேரணை!

editor 2

கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களைப் பலாத்காரமாகத் தகனம் செய்தமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, பொருத்தமான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்துக்குத் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.

விவாதத்திற்குத் திகதி குறிப்பிடப்படாத அந்தப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

குறித்த பிரேரணையில், கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கான இயலுமை உள்ளதென உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

குறித்த சடலங்களை நல்லடக்கம் செய்வதால் நிலக்கீழ் நீரில் வைரஸ் கலப்பதற்கான அபாய நிலை உள்ளதாகக் கூறி கடந்த அரசாங்கம் செயற்பட்டமையும், அந்த சடலங்களை உறவினர்களின் உடன்பாடின்றி தகனம் செய்தமையும், பின்னர் அவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் செயற்பட்டமை சரியானதல்ல.

எனினும் இவ்விடயம் தவறு என்று தெரிவித்துக் கடந்த அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக மன்னிப்பு கோரியிருந்தது.

இந்த தொற்றினால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தமது சமய ரீதியான இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்கோ அல்லது குறித்த சடலங்களைப் பார்வையிடுவதற்கோ சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

இது குறித்து உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் எழுந்த எதிர்ப்புகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாகத் தகனம் செய்வதற்குப் பதிலாக ஓட்டமாவடியில் , மஜ்மா நகர் எனப்படும் தனிமையான பிரதேசத்தில் குறித்த சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.

குடும்ப உறவினர்கள் இறுதிக் கடமைகளைச் செய்வதற்கோ, மரியாதை செலுத்துவதற்கோ, உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் அரசாங்கம் பாரதூரமான தவறுகளை புரிந்துள்ளமையினாலும் குறிப்பிட்ட விடயங்களை உரிய முறையில் விசாரணை செய்து பொருத்தமான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கும்படியாக
குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article