மியன்மார் அகதிகளுடன் கரையொதுங்கிய படகில் இருந்தோருக்கு அவசியமான உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் அவசியமான ஏனைய வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இவ்விவகாரம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் வெகுவிரைவில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது முல்லைத்தீவு,
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டின் அகதிகள் 102 பேருடன் படகொன்று கரையொதுங்கிய நிலையில், இவ்விடயத்தில் அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கை குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத்,
இவ்விடயம் தமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டவுடன் அக்கப்பலில் இருந்தவர்களுக்கு அவசியமானஉணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்குவதற்கும், அவசிய மான வசதிகளை செய்துகொடுப்பதற்கும் தாம் நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார்.
அதேவேளை இது உள்நாட்டு விவகாரம் அல்ல, மாறாக பிறிதொரு நாட்டுடன் தொடர்புடைய சர்வதேச விவகாரம் எனச் சுட்டிக்காட்டிய அவர், எனவே எமது நாட்டினால் கைச்சாத்தி டப்பட்டிருக்கும் சர்வதேச பிரகடனங்களுக்கு அமைவாகவே இதனை அணுக முடியும் என்று குறிப்பிட்டார்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி, இயலுமான வரை விரைவில் இதுகுறித்த நிரந்தர தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.