தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளையிலிருந்து (10) மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் இணைந்ததாக நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமையும் படிப்படியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதேவேளை, கடற்பரப்புகளில் காற்று, மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.