தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் ஒற்றையாட்சி முறைமையை எதிர்த்து சமஸ்டி அடிப்படையிலான தீர்வே இறுதியானது என்ற அடிப்படையில் இணைந்து செயற்படுவதற்கு முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள் தீர்மானித்திருப்பதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு ஆட்சி அமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி விரைவில் புதிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துவரும் நிலையிலேயே குறித்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
குறித்த ஒன்றிணைப்பு முயற்சியினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்திருப்பதாக தெரியவருகிறது.
இது தொடர்பில்,
தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரனுக்கும் இடையில் நட்பு ரீதியிலான சந்திப்பு நடைபெற்றதாகவும் இதன் போது அரசியல் தீர்வு விடயத்தில் இணைந்து செயற்பட கொள்கையளவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் நம்பகரமாக தெரியவந்துள்ளது.
இதேவேளை,
சங்கு சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த செல்வம் அடைக்கலநாதனும் குறித்த செயற்பாட்டிற்கு இணங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும் அது தொடர்பில் உறுதிப்படுத்தமுடியவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது தமிழரசுக்கட்சி, தமிழ்க்காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி), ரெலோ, ஈபிஆர்எல்எப் கட்சிகள் அங்கத்துவம் பெற்றிருந்தன.
பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழ்க்காங்கிரஸ் கட்சி முதலில் வெளியேறிய நிலையில், அதன் பின்னர் ஈபிஆர்எல்எப் கட்சியும் இறுதியாக ரெலோ கட்சியும் வெளியேறியிருந்தன.
கூட்டமைப்பில் அங்கம் பெற்றிருந்த தமிழரசுக்கட்சி தாமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.