கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அபிவிருத்தி லொத்தர் சபை, ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைமனு கோரல் முறைக்கு மாறாகப் பல தனியார் நிறுவனங்களுக்கு லொத்தர் ஊக்குவிப்பு பணிகளை ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி அதன் முன்னாள் தலைவர் சந்திரவன்ச பதிராஜவிற்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு தொடர்பில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்திருந்த அமைச்சர் விஜித ஹேரத்தை, இன்றைய தினம் சாட்சியமளிக்க நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவித சாட்சிய விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அத்துடன் அன்றைய தினம் அமைச்சர் விஜித ஹேரத்தையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.