வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தத் திருவிழாவின்போது கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மற்றொருவர் காணாமல்
போயுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழாவில் சமுத்திர தீர்த்தம் நேற்று செவ்வாய்க்கிழமை வடமராட்சி – பருத்தித்துறை – கற்கோவளம் கடற்பரப்பில் நடைபெற்றது. இதன்போதே இந்த இரு சம்பவங்களும் இடம்பெற்றன.
இந்த சம்பவங்களில், வடமராட்சி கிழக்கு – அம்பன்குளத்தை சேர்ந்த கந்தசாமி வினோகரன் (வயது -54) என்பவர் உயிரிழந்தார். சாவகச்சேரி – நுணாவிலை சேர்ந்த தயாரூபன் வைஷ்ணவன் (வயது -30) என்பவர் காணாமல் போயுள்ளார். இவர் வேம்படி மகளிர் கல்லூரியின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் அறியவருபவை வருமாறு,
நேற்றைய தினம் நடந்த சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவைக் காண பல பாகங்களிலும் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.
வழமைபோன்று வல்லிபுர ஆழ்வார் தீர்த்தமாடிய பின்னர், பக்தர்கள் கடலில்
இறங்கி நீராடினர். இதன்போது, உயிரிழந்த நபர் நீரில் மூழ்கியுள்ளார்.
அவரை மீட்ட அங்கிருந்த மக்கள் – கடற்கரையை அண்டிய பரப்பு மணல்
நிறைந்தது என்பதால் சுமார் 1.5 கிலோமீற்றர் தூரம் அவரை உழவியந்திரத்தில் கொண்டு சென்று, பின்னர் நோயாளர் காவு வண்டி மூலமாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில்,
இரவு சுமார் 8.30 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களில்
ஒருவரை காணவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து நேற்றிரவு கடற்படை மற்றும் அந்தப் பகுதி மீனவர்களின் உதவியுடன் அவரைத் தேடும் பணி தொடர்ந்தது. நீண்ட நேரத் தேடுதலில் அவர் மீட்கப்படவில்லை.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.