மத்திய வங்கியின் ஆளுநர் தனது பொறுப்பினை நிறைவேற்றவில்லை – கிரியெல்ல!

மத்திய வங்கியின் ஆளுநர் தனது பொறுப்பினை நிறைவேற்றவில்லை - கிரியெல்ல!

editor 2

நாட்டின் நிதி நிலைமை மற்றும் நிதி கொள்கை தொடர்பில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மத்திய வங்கி பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லை. மத்திய வங்கியின் ஆளுநர் தனது பொறுப்பினை நிறைவேற்றவில்லை. பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ளார் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற அமர்வின் போது சபைக்கு அறிவிப்பை விடுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,

2023 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 80 (2) ஆம் ஏற்பாடுகளுக்கு அமைய மத்திய வங்கியின் ஆளுநர், நிர்வாக சபை மற்றும் நிதி கொள்கை சபையின் உறுப்பினர்கள் மற்றும் மத்திய வங்கியின் சகல பிரதி ஆளுநர்கள், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மத்திய வங்கியின் பணிகள் குறித்து பாராளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்த சட்டத்தால் பொறுப்பாக்கப்பட்டுள்ளார்கள்.

இதற்கமைய மத்திய வங்கியின் ஆளுநர், உட்பட உயர் அதிகாரிகள் இன்று பாராளுமன்றத்துக்கு வருகை தந்து மத்திய வங்கியின் பணிகள் குறித்து தெளிவுப்படுத்தவுள்ளார்கள்.இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அறிவித்தார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல,

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கடந்த நான்கரை ஆண்டு காலமாக பாராளுமன்றத்துக்கு வருகைத் தந்து தெளிவுப்படுத்தவில்லை. தற்போது குதிரை சென்றதன் பின்னர் லாயத்தை மூடிய கதை போல் காணப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து தெளிவுப்படுத்தும் பொறுப்பு மத்திய வங்கியின் ஆளுநருக்கு இருந்தது.

நாட்டின் நிதி நிலைமை பற்றி அவர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதன் பின்னரே பல விடயங்கள் வெளிவந்தன.

மத்திய வங்கியின் ஆளுநர் தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். நாட்டின் நிதி நிலைமை குறித்து நான்கு மாதங்களுக்கு ஒருமுறை அவர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லை. ஆகவே மத்திய வங்கியின் ஆளுநர் பொறுப்புடன் செயற்படவில்லை என்றார்.

Share This Article