வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியினரின் பெயரில் யாழ்ப்பாணத்தில் விவாகரத்து பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சட்டத்தரணியின் அலுவலகத்தில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் திருமணமாகி இத்தாலியில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இடையில், சில வருடங்களுக்கு முன்னர் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு இருவரும் இத்தாலியில் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் கணவன், சாவகச்சேரி பகுதியில் வசிக்கும் தனது சகோதரியிடம், தமக்கு யாழ்ப்பாணத்தில் திருமணம் நடைபெற்றமையால், யாழ்ப்பாணத்தில் விவாகரத்திற்கு விண்ணப்பித்து , விவாகரத்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார்.
அதனை அடுத்து சகோதரி , யாழ்ப்பாணத்தில் உள்ள பெண் சட்டத்தரணி ஒருவரை நாடி , வெளிநாட்டில் உள்ள தம்பதியினருக்கு யாழ்ப்பாணத்தில் விவாகரத்து பெற்று தருமாறு கோரியுள்ளார்.
அதனை அடுத்து சட்டத்தரணி, தனது கனிஷ்ட சட்டத்தரணிகள் இருவரை கணவனுக்கு ஒருவரையும், மனைவிக்கு ஒருவரையும் நியமித்து சாவகச்சேரி நீதிமன்றில் விவகாரத்திற்கு விண்ணப்பித்து, வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து , நாட்டில் இல்லாத இருவருக்கும் விவாகரத்து பெற்றுக்கொடுத்துள்ளார்.
விவாகரத்து பெற்று சில காலத்தின் பின்னர் , இத்தாலியில் வசித்து வந்த பெண் , யாழ்ப்பாணம் வருகை தந்து, பிறிதொரு சட்டத்தரணி ஊடாக தனக்கு விவாகரத்திற்கு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்த வேளை , அப்பெண்ணிற்கு ஏற்கனவே விவாகரத்து கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டில் இல்லாத தனக்கு , தன்னுடைய சம்மதம் எதுவும் பெறப்படாத நிலையில் எவ்வாறு விவாகரத்து வழங்கப்பட்டது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அது தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்நிலையில் விவாகரத்து நடவடிக்கையை முன்னெடுத்த சட்டத்தரணியின் அலுவலகத்தை சோதனையிட நீதிமன்ற அனுமதி பெற்ற பொலிஸார் அலுவலகத்தினை சோதனையிட்டதுடன் ,கணனி உள்ளிட்டவையுடன் அலுவலகத்தில் உள்ள கோப்புக்களையும் சோதனையிட்டனர்.