இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம் பெற்ற மிகமோசமான வன்முறைகள் – மீறல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவதும் – பொறுப்புக் கூறல் உறுதிசெய்யப்படுவதும் இன்றியமையாததாகும்.
இவ்வாறு ‘நோபயர் ஸோன்’ ஆவணப்படத்தின் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார். இறுதிக் கட்டப் போரில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக கெலும் மக்ரே தயாரித்திருந்த ஆவணப் படம் சனல் – 4 தொலைக்காட்சி அலைவரிசையில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. போர் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகள் பூர்த்தியை தொடர்ந்து கெலும் மக்ரே வெளியிட்ட செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்களின் பின்னர்,
அதனை நாம் மே மாதம் 18 ஆம் திகதி நினைவுகூருகின்றோம். இருப்பினும் தமிழ் மக்களுக்கு எதிரான மீறல்கள் தொடர்கின்றன.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினர் அதனால் ஏற்பட்ட தாக்கத்துடனேயே தொடர்ந்து வாழ்கின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் அவர்களின் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான உரிமை இலங்கை அரசாங்கத்தால் மறுக்கப்படுகின்றது. அதேபோன்று இன்றளவிலேயே தமிழர் தாயகப் பகுதிகள் படைத் தரப்பினரின் வலுவான கட்டுப்பாட்டின்கீழ் இருக்கின்றது.
எனவே, முன்னெப்போதையும்விட இப்போது உண்மை மற்றும் நீதி என்பன உடனடியாக உறுதிப்படுத்தப்படவேண்டியது மிகவும் அவசியமாகின்றது. 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மிகமோசமான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவதும், பொறுப்புக் கூறல் உறுதி செய்யப்படுவதும் இன்றியமையாததாகும்.
இதேபோன்ற சம்பவங்களே இன்று காசாவில் இடம்பெறுகின்றன. காசாவில் வாழும் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என சகல மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய அரசாங்கம் மிகமோசமான மீறல்களைக்
கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றது.
இலங்கையில் இடம்பெற்ற மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசும்
சர்வதேச சமூகமும் அடைந்திருக்கும் தோல்வி, தற்போது காஸாவில் இடம் பெற்றுவரும் அதனையொத்த மீறல்களை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
மனித உரிமைகள் மற்றும் நீதிக்கு மதிப்பளிக்கும் சகலரும் ‘இனி இவ்வா
றான சம்பவங்கள் நடைபெறக் கூடாது’ என்பதையே வலியுறுத்த வேண்டும் என்றும் கூறினார்.