இந்தியாவில் கைதான நால்வரும் சஹ்ரான் குழுவைச் சேர்ந்தவர்கள்?

இந்தியாவில் கைதான நால்வரும் சஹ்ரான் குழுவைச் சேர்ந்தவர்கள்?

Editor 1

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ. எஸ். அமைப்பினர் நால்வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய தேசிய தௌகீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம், இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட ஐ. எஸ்.அமைப்பினரான இலங்கையர்கள் தொடர்பில் இந்தியாவுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு – நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன் நேற்று தெரிவித்தார்.

இதேசமயம், இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கும் தயாராக இருந்தனரென குஜராத் பிரதி பொலிஸ்மா
அதிபர் விகாஷ் சாஹே குறிப்பிட்டார்.

இந்த நான்கு பயங்கரவாதிகளும் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.

அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைதான நால்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் தொடர்பில் நேற்று முன்தினம் குஜராத் பயங்கரவாத தடுப்புபிரிவு ஊடகங்களிடம் வெளிப்படுத்தினர்.

கைதானவர்கள், மொஹமட் நுஸ்ரத் (வயது 33) – நீர்கொழும்பு, மொஹமட் நப்ரான் (வயது 27) – கொழும்பு, மொஹ மட் ரஷ்டீன் (வயது 43), மொஹமட் பரிஷ் (வயது – 35) ஆகியோராவார். இவர்கள் இலங்கையிலிருந்து சென்னை வழியாக அகமதாபாத் நகருக்கு விமானம் மூலம் சென்றுள்ளனர்.

தமிழ் மொழியை மட்டுமே பேசும் இந்த நான்கு பயங்கரவாதிகளும் மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன் விசாரிக்கப்பட்டனர்.

இவர்களிடமிருந்து தொலைபேசி, இரு நாட்டு நாணயத்தாள்கள் மற்றும் விமான சீட்டுக்களும் ஒருவரின் பயணப் பொதியிலிருந்து ஐ. எஸ். ஐ. எஸ்.அமைப்பின் கொடியும் கண்டுபிடிக்கப்பட்டன.

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஐ.எஸ். ஐ. எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபுவை கடந்த பெப்ரவரி மாதம் சமூக ஊடகங்கள் மூலம் இந்தக் குழு அடையாளம் கண்டுள்ளது. பின்னர் இவர்கள் கடும்போக்கு ஐ. எஸ். சித்தாந்த வாதிகளாக மாறினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அபுவின் ஆலோசனையின் பேரில் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இலங்கை பணத்தில் 4 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் தற்கொலை படைத்தாக்குதலுக்கும் தயாராகி இருந்தனர் என்று கூறப்பட்டது.

இவர்களால் மறைத்து வைக்கப்பட்ட பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 03 கைத் துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தப்படும் 20 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட நான்கு ஐ. எஸ்.ஐ. எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட வாய்மொழி மற்றும் விசாரணை ஆதாரங்களின் அடிப்படையில் நாட்டின் தண்டனை சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, நேற்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை ஐ.எஸ். ஐ. எஸ். பயங்கரவாதிகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு – நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர்பதிலளித்தார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட நான்கு ஐ. எஸ். பயங்கரவாதிகளும் இதற்கு முன்னர் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களாகச் செயல் பட்டவர்கள் என இந்திய ஊட கங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான பயங்கரவாதிகள் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். 2019 ஈஸ்டர்தாக்குதலுக்குப் பிறகு இந்த அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Article