நேர்மையான அரசியல்வாதிகள் கொள்கையொன்றின் அடிப்படையிலேயே செயற்படுவர். அதனை விடுத்து ஆள்பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக குப்பைகளை கட்சிக்குள் இணைத்துக் கொண்டிருந்தால் அது தோல்விக்கான முதற்படியாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் ஒரு தரப்பினருடன் இணைவதற்கும், இணைத்துக் கொள்வதற்கும் ஆசைகள் ஏற்படலாம். ஆனால் நேர்மையான அரசியல்வாதிகள் என்றால் கொள்கையொன்றுடன் செயற்பட வேண்டும்.
அவ்வாறன்றி ஆள் பலத்தைக் காண்பிப்பதற்காக குப்பைகளை கட்சிக்குள் இணைத்துக் கொண்டிருந்தால் அது தோல்விக்கான முதற்படியாகும்.
நாட்டில் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் மக்கள் அதிருப்தியிலும் கவலையிலும் உள்ளனர். எனவே மாற்றமொன்றையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதே வேளை அடுத்து ஆட்சியை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து தீர்மானிக்க முடியாத நிலைமையிலும் மக்கள் உள்ளனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே மக்கள் எந்த தரப்பினை தெரிவு செய்வார்கள் என்பதை அறிய முடியும்.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் மீதான வாக்கெடுப்பின் போது நான் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக நின்று செயற்படுவேன். ஆட்சியை வழங்குவதற்கு மக்கள் தீர்மானிப்பார்களாயின் நான் அவர்களுக்காக முன்னிற்பதற்கு தயாராகவுள்ளேன் என்றார்.