போதைப் பொருள் வர்த்தகர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இன்று முதல் மீண்டும் வழமை போல முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணை பிரிவினால் அடையாளம் காணப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களின் சொத்துகள் மற்றும் உடைமைகள் என்பவற்றை அரசுடையாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக பொலிஸ் சட்டப் பிரிவின் கீழ் பொலிஸ் சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை நத்தார் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, கடந்த இரண்டு நாட்களில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, நத்தார் மற்றும் நேற்றைய பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 600க்கும் அதிகமான மதுபான போத்தல்களுடன் சீன பிரஜை உட்பட மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி, மண்டாவளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலும் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, கொள்ளுப்பிட்டி காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கொள்ளுப்பிட்டி – ரொட்டுண்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்த 44 வயதுடைய சீன பிரஜை ஒருவர் கைதானார்.
அத்துடன், யாழ்ப்பாணம் – ராசாவின் தோட்டம் பகுதியில் 428 மதுபான போத்தல்களும், தொம்பே – மண்டாவளை பகுதியில் 20க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.