சர்ச்சைக்குரிய இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலர் பதவிக்கான தெரிவை மீண்டும் நடத்துவது என்றும் தேர்தல் மூலம் பொதுச் செயலாளரை தெரிவு செய்வது எனவும் அந்தக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் ஊடாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சிங்கப்பூர் செல்கிறார். அவர் எதிர்வரும் 10ஆம் திகதி நாடு திரும்புகிறார். அவர் நாடு திரும்பியதும் பொதுச் செயலாளருக் கான தேர்தலை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தேசிய மாநாட்டை நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகின்றது. இதனிடையே, பொதுச் செயலாளருக்கான தேர்தலில் கிழக்கு மாகாணத்தவர் ஒருவரே வரும் விதமாக மத்திய செயல்குழுவில் தீர்மானிக்கவுள்ளதாகவும் அறிய வருகின்றது.
தற்போதைய நிலவரப்படி, திருகோணமலையின் குகதாசனும் மட்டக்களப்பின் சிறீநேசனும் பொதுச் செயலர் பதவியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. எனினும், மேலும் சிலர் போட்டியில் பங்கேற்கக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.
முன்னதாக, தமது கட்சிக்கு பொதுச் செயலாளரை தெரிவு செய்வதற்கு கடந்த சனிக்கிழமை இலங்கை தமிழ் அரசு கட்சியினர் திருகோணமலையில் கூடினர். மத்திய செயல்குழு, பொதுக் குழுவினர் கூடிய நிலையில், கட்சியின் மரபுப்படி மத்திய செயல்குழுவில் தெரிவு இடம்பெற்றது.
பலத்த வாதப் பிரதிவிவாதங்களின் முடிவில் பொதுச் செயலாளராக திருகோணமலை மாவட்ட தலைவர் ச. குகதாசன் தெரிவானார். இந்தத் தெரிவுக்கு மத்திய செயல்குழுவினர் பெரும்பான்மையாக இசைந்தனர். இதைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பாக பொதுக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.
தெரிவு சுமுகமாக நடந்திருந்த நிலையில் பொதுக்குழுவினர் பலர் வெளியேறியிருந்தனர். எனினும், பொதுக்குழுவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத் தப்பட்டது. இதில் 114 ஆதரவு வாக்குகள் மூலம் குகதாசனின் தெரிவு உறுதிப்படுத்தப்பட்டது. எனினும், பலர் வெளியேறிய பின்னர் நடத்தப்பட்ட இந்த முடிவை ஏற்கமாட்டோம் என மீண்டும் களேபரம் நடந்த நிலையில், பொதுச் செயலர் தெரிவும் கட்சியின் தேசிய மாநாடும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் புதிய தலைவராக தெரிவான சிறீதரனும் சந்தித்துப்பேசினார்.
மாவையின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் சுமந்திரனும் பங்கேற்றிருந்தார். இந்த நிலையில், பொதுச் செயலாளர் உட்பட புதிய நிர்வாக தெரிவை கிடப்பில் வைத்திருக்க அவர்கள் தீர்மானித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது