இடைநிறுத்தப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க உள்ளதோடு 23 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்ள உள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டிணைவு தெரிவித்துள்ளது.
வைத்தியர்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் கடந்த 11, 16 ஆம் திகதிகளில் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் கொடுப்பனவு குறித்து சுகாதார அமைச்சர் மற்றும் நிதியமைச்சருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்காத நிலையில் மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகாதார தொழிற்சங்கங்களின் தொழிசார் உரிமைகளுக்கு மறுப்பு தெரிவித்த சுகாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 23 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதாரத் தொழிற்சங்கங்கள் கூட்டிணைவின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சுகாதாரத் தொழிற்சங்கங்களின் மத்திய குழுக் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.